கடற்படையின் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி பலி!!!

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் கடற்படையின் பவல் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி புங்குடுதீவு பகுதியினை சேர்ந்த திருவானந்தன் கேசனா வயது(09) என பொலிஸார் கூறினர். உயிரிழந்த இந்த சிறுமி தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன் போது எதிர்திசையில் வந்த கடற்படையின் வாகனம் மோதியுள்ளது. சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மாமன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அவர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்பு கொண்டு இவ்விபத்துக்கு காரணமான கவச வாகனத்தை செலுத்தி வந்த கடற்படை சாரதியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் தொடர்பு கொண்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் குறித்த கடற்படை சாரதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் இன்றைய தினமே நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்து இருந்தார்.

Related Posts