கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகள் காட்டிக் கொடுத்தன

திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அக்குழுவினர், நாட்டில் 10 நாட்கள் தங்கியிருந்தனர். அக்குழுவினர், கொழும்பு, மாத்தளை, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருக்கோணமலை உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அக்குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் உள்ளிட்டோரையும் சிவில் பிரிதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கட்டாயப்படுத்தி அல்லது தன்னிச்சையாக காணாமல் போகச் செய்யப்படுமமைக்கான பணிக்குழு நிறுவப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இதேவேளை, ‘இலங்கையிலிலுள்ள காணாமற்போனோர் ஆணைக்குழுவின் மீது காணப்படும் நம்பிக்கைக்குறைவாகவுள்ளது. நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளோம். அத்துடன், கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தலை குற்றமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்தியுள்ளோம். நாங்கள் சந்தித்த சில பேர், பின்பு, நாங்கள் ஏன் இங்கு விஜயம் மேற்கொண்டோம் என்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அக்குழுவினரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘பல தசாப்தங்களாக, காணாமல் போகச் செய்யப்படுதலானது, அரசியல் எதிர்ப்புக் கருத்துக்களை அடக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அங்கமாகவும் உள்ளக முரண்பாட்டிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. போர்க் காலத்திலும், அதற்குப் பின்னரான நிலைமையிலும், காணாமல் போகச் செய்யப்படுதலானது, சில அரச அதிகாரிகளாலும் துணை இராணுவக் குழுக்களாலும், வெறுமனே பொருளாதாரக் காரணிகளுக்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நீதித்துறையின் பொறுப்புக் கூறலில்லாத நிலை, காணாமல் போனோர் பற்றி உண்மைகளைக் கண்டறிவதற்கான உறுதியானதும் தொடர்ச்சியானதுமான நடவடிக்கைகள் இல்லாமை, இழப்பீடு வழங்குவதற்கும் சமூக, உளவியல், பொருளாதார உதவிகளை வழங்குவதற்குமான வேலைத் திட்டங்கள் இல்லாமை காரணமாகவும், சமூகத்தில் ஆழமான காயங்களையும் உறவுகளிடையே நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போனோர் பற்றிய நடவடிக்கைகளில், அவ்வாறானோரின் உறவினர்களின் கருத்துக்களையும் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளல், அந்தச் செயற்பாட்டின் சட்டத்தகுதியாக்கலும் அம்மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கும் அவசியமானது மாத்திரமன்று, உண்மையைக் கண்டறிதல், நீதி, இழப்பீடு வழங்கல் போன்றவை, பாதிப்பட்டோரினதும் ஏனையோரினதும் பங்குபற்றலுக்கான விருப்பில் பெருமளவு தங்கியுள்ளது என்பதாலாகும் எனத் தெரிவிக்கிறது.

தங்களுடைய பணிக் குழுவுக்கு, அச்சுறுத்தல் உத்திகள், பயமுறுத்தல், பாலியல் துஷ்பிரயோகங்கள், ஏனைய வகையிலான வலுக்காட்டாயப்படுத்தல் போன்றன பற்றிய விரிவானதும் நம்பத்தகுந்ததுமான குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தது. இந்தக் குற்றச்சாட்டுகள், பாதுகாப்பு, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீது, குறிப்பாக குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மீதே காணப்படுவதாகவும் அது தெரிவிக்கிறது.

தனது பணிக் காலத்தின்போது, 12,000 சம்பவங்கள் தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளதாகவும், அவற்றில் 5,750 விடயங்கள், இன்னமும் தீர்க்கப்படாமிருப்பதாகவும் தெரிவிக்கும் அக்குழு, தங்களுக்குக் கிடைத்த விடயங்களில் அதிகமானவை, 1980களின் முடிவிலும் 1990களின் ஆரம்பத்திலும், மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பிலானவை எனத் தெரிவிக்கிறது.

அத்தோடு, அடுத்ததாக, அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான முரண்பாட்டில், தமிழ் மக்களின் காணாமல் போனமை காணப்படுவதாகவும் அது தெரிவிக்கிறது. வழக்கமான, விரிவான, கட்டமைப்புரீதியான காணாமல் போகச் செய்யப்படுதலுக்கு மேலாக, ‘வெள்ளை வான்’ கடத்தல்கள் காணப்பட்டதாதகவும் அது தெரிவிக்கிறது. அத்தோடு, பெருமளவிலான எண்ணிக்கையான காணாமல் போகச் செய்யப்படுதல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கும் அக்குழு, காணாமல் போயுள்ள மற்றும் கடத்தப்பட்டுள்ள படையினரின் குடும்பத்தினரையும் சந்தித்ததாகவும் தெரிவிக்கிறது. அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கையால் காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது உறவினர்களினதும் உரிமைகளும் சமனான அளவில் பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

காணாமல் போனமை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களையும் அதன் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ள அக்குழு, அவற்றின் மீது நம்பிக்கையற்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், அண்மைக்காலமாக, இலங்கை அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நடவடிக்கைகள், நம்பிக்கையளிப்பதாகவும், இன்னும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related Posts