யாழ்ப்பாணம் காரைநகர் மடத்துவெளி மாதிரி கிராமத்தை கடற்படையினர் சுவீகரித்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் சங்கானை மாவட்ட செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான மடத்துவெளி மாதிரி கிராம மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கவென, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 வீடுகளை அமைப்பதற்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை தீர்மானித்தது.
எனினும், மடத்துவெளி மாதிரி கிராமத்திற்கு சொந்தமான 6 எக்கர் காணிகளையும் அதனை சூழவுள்ள 126 ஏக்கர் காணியையும் கடற்படையினர் சுவீகரித்துள்ளனர். அவற்றை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், இதுவரை குறித்த காணிகளை விடுவிக்காத கடற்படை, காணிகளை சுற்றி முள் வேலிகளையும் அமைத்துள்ளது. இந்நிலையில், குறித்த வீட்டுத்திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கவேண்டிய கட்டாயமும் உள்ளதால், மடத்துவெளி கிராம மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் கைமாறியது.
கடற்படையினர் இம்மக்களின் காணிகளை விடுவிக்கும் பட்சத்தில், அடுத்த வருடம் மடத்துவெளி மாதிரி கிராம மக்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.