கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணியாற்றினால் அந்த நிறுவனம் தடை பட்டியலுக்குள் சேர்க்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் சுகாதார சேவைகளுக்கான கட்டணத்தை 20 வீதம் அதிகரிக்குமாறு தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் நேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனியார் சுகாதார சேவைக்காக தனியார் சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் வைத்திய பரிசோதனை கட்டணம், வைத்திய கட்டணம், வைத்தியசாலை கட்டணம் என்பவற்றை எவ்வகையிலும் அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய கட்டணம் 250 ரூபாவிலிருந்து 2000 ரூபா வரையிலும் வைத்தியசாலை கட்டணம் 100 ரூபாவிலிருந்து 500 ரூபா வரையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 33 வைத்திய பரிசோதனைக்கான கட்டணம் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுகாதார சேவைக்காக அரசாங்கம் பெரும் தொகை பணத்தை செலவு செய்வதாகவும் சுதந்திர சுகாதார சேவையை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அரச வைத்தியசாலைகளில் கடமை புரிகின்ற வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய வைத்தியர்கள் கடமை நேரத்தினுள் தனியார் வைத்தியசாலைகளில் சேவை செய்வார்களாயின் அந்த நிறுவனம் தடை பட்டியலுக்குள் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ண தெரிவித்தார்.