யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஒருவரை, மீட்டுத்தருவதாக கூறி காணாமற்போனவரின் உறவினர்களிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிய நபரை யாழ்.பொலிஸார் திங்கட்கிழமை (01) கைது செய்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் நீர்வேலியைச் சேர்ந்த வைகுந்தன் என்ற இளைஞன், தனது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இடம்பெற்று ஜந்து வருடங்களின் பின்னர், கடத்தபட்டவரின் உறவினர்கள் வீட்டிற்கு கடிதமொன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் உங்களது சகோதரன் வவுனியா ஜோசப் முகாமில் இருக்கின்றார். அவரை மீட்டுத்தருவதற்கு பணம் வேண்டும் எனவும் அவ்வாறு பணம் வழங்கினால் வவுனியா சி.ஜ.டி பொறுப்பாளர் ஸ்டீபன் ஊடாக அவரை மீட்டுத்தருவதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பணத்தை வழங்குவது தொடர்பாக ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி தொலைபேசி இலக்கமும் குறிக்கப்பட்டிருந்தது. காணாமற்போனவரை மீட்பதற்காக அவரது சகோதரன் குறித்த தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பேசினார்.
அதன் பின்னர், அவர் கோரிய 2 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். அதன்பின்னர் அலைபேசியின் ஊடாக காணாமற்போனவர் பேசுவது போன்று பேசியுள்ளார். இதனை நம்பிய சகோதரன், மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் அந்த அலைபேசி இலக்கம் செயலிழந்ததுடன், சிறுது காலம் கழித்து வேறு ஒருவர் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (01) பணம் கொடுத்த நபரும், அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாண நகரத்துக்கு வருகை தந்தபோது, பணம் பெற்று ஏமாற்றிய நபர், இவர்களது மோட்டார் சைக்கிளின் குறுக்காக பாய்ந்து செல்லும் போது, அவரை அடையாளங்கண்ட இருவரும், ஏமாற்றிய நபரை மடக்கிப் பிடித்தனர்.
அதன் பின்னர் அந்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பில் முறைப்பாட்டையும் பதிவு செய்தனர்.
மேற்படி நபர் கண்டியைச் சேர்ந்தவர் எனவும் தற்போது சாவகச்சேரியில் வசித்து வருகின்றமையும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.