கடத்தல் வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஜெயிலில் அடையாளம் காட்டிய பாவனா

பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார்.

ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சலீம், பிரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

2 நாட்களுக்கு முன்பு கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சுனில்குமாரும் அவரது நண்பர் விஜேசும் கைதானார்கள்.

இதற்கிடையே இந்த வழக்கில் முதலில் கைதான மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்ட போலீசார் ஏற்பாடு செய்தனர். காக்கநாடு ஜெயிலில் நேற்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது

25 பேருடன் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்டினார். இதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சுனில்குமார், விஜேஷ் இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து இருவரும் நேற்று போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். மார்ச் 8-ந்தேதிவரை போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.

எனவே போலீசார் நேற்றே சுனில்குமார், விஜேஷ் இருவரிடமும் விசாரணையை தொடங்கினர்.

இதில் சம்பவம் நடந்த அன்று சுனில்குமார், கொச்சியை அடுத்த பொன்னுருட்டியில் உள்ள நண்பர் வீட்டிற்கு நள்ளிரவில் சென்றது தெரியவந்தது. நண்பர் வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து சுனில் வீட்டிற்குள் சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அங்கு 3 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், ஒரு ஐபேடு, ஒரு மெமரிகார்டு, ஒரு பென்டிரைவ் ஆகியவை கிடைத்தது. அதனை போலீசார் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

சுனில்குமாரும், விஜேசும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பதுங்கி இருந்த இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலையிலேயே சுனில்குமாரும், விஜேசும் கோவை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பதுங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும் அவர்கள் தங்கி இருந்த போது விட்டுச்சென்ற தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். குறிப்பாக சுனில்குமார் தொலைத்து விட்டதாக கூறிய செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இதற்காக சுனில்குமாரின் காதலியை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குற்றவாளிகள் கைதானதை தொடர்ந்து நடிகை பாவனா, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அவரது தோழிகள் தெரிவித்தனர். மேலும் அவர், நடித்து முடிக்க வேண்டிய படப்பிடிப்புகளில் தொடர்ந்து நடிக்க வேண்டு மென்று பாவனாவின் நண்பர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர், நேற்று நடிகர் பிரிதிவிராஜின் படப்பிடிப்பில் பங்கேற்றார். அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Posts