கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என ஸ்ரீலங்கா கடற்படைப் புலனாய்வு பிரிவின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இடம்பெற்றது.
குறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு தாமே உணவு வழங்கியதாகவும், அவர்களுடன் உரைடியிருப்பதாகவும் மன்றில் சாட்சியமளிக்கையில் கூறியுள்ளார்.
மாணவர்களுடனான உரையாடலின்போது விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதை தாம் புரிந்துகாண்டதாகவும் குறித்த கடற்படை புலனாய்வு பிரிவின் சிப்பாய் மன்றில் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட மறுதினமே கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் குறித்த 5 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும், அம்பாறை காமினி எனும் நபரும் சென்றிருந்ததாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ஐவரில் கொழும்பு – கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மற்றும் திகலேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்றைய சாட்சியங்கள் முடிந்த பின்னர் அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனைக் கவனத்திற்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.