அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ‘தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
பலவற்றால் அடிபட்டு தமது சுய கௌரவத்தை இழந்திருந்த மக்கள் தற்பொழுதுதான் எழுந்து நிற்கப் பழகிவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஜனநாயக வழியில் தலைநிமிர்ந்து செல்லும் வாழ்க்கையை வாழ நாங்கள் எங்களால் முடிந்த சகலதையும் செய்வோம்.
தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக்கூடாது என்பதுடன், ஒரு வன்முறைக் காலத்தை தாண்டி வந்துள்ளோம் என்பதையும் மறக்கவும் முடியாது. மக்களை கைப்பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது என்பதை நாங்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.
பொதுவாழ்க்கையில் எப்போதும் பொதுநலத்துடன் செயற்படவேண்டும் என்பதுடன், எமது உறவுகள் சார்ந்ததாக முடிவுகளை தான்தோன்றித் தனமாக எடுக்கக்கூடாது. எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்காமல் தலைநிமிர்ந்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட அமைச்சு பதவிகள் தொடர்பில் உறுப்பினர்கள் யாராவது வந்து கேட்டிருந்தால் அவர்களிற்கு பதில் சொல்லியிருப்பேன். இருப்பினும், அப்படி யாரும் என்னிடம் வந்து கேள்வி எதனையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு காரணங்கள் கூறுவதற்கு நான் தயாராக இருந்தேன்’ என்று அவர் மேலும் கூறினார்.
காணொளி Newjaffna