கஞ்சாவை திருடி விற்றதாக பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்படும் கஞ்சா போதைப்பொருளை நீதிமன்றில் சமர்ப்பிக்க முன்னர் அவற்றில் இருந்து பகுதியளவில் கஞ்சா போதை பொருளை திருடி அவற்றை வெளியில் விற்பனை செய்து வந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சான்று பொருளான போதை பொருள் திருட்டு மற்றும் திருடிய போதை பொருளை விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் எதிராக பொலிஸாரின் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Related Posts