கஜேந்திரகுமார் மீண்டும் பேரவையோடு இணைந்துகொள்வார் – விக்கி நம்பிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பலரும் பிரயத்தனத்துடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.

ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால்தான் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையினை ஏற்கும் எந்த கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். கொள்கைகள் என்பது வருங்கால தமிழ் மக்கள் பற்றியதொன்றாகும்.

ஆகையால் அதனை எவ்வாறு அமைக்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுக தமிழ் பேரணியில் பேசவுள்ளோம்.

இதேவேளை கொள்கை ரீதியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்முடன் சேர்ந்தவர்கள். சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விடுப்பட்டு நிற்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவர்களும் எம்முடன் வந்து இணைவார்கள் என நம்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts