கச்சத்தீவை மீட்க இலங்கை மீது போர் தொடுக்க முடியுமா? – இந்திய அரசின் சட்டத்தரணி

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்திய மத்திய அரசிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

Katchatheevu

பாக்கு நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள். அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் மீனவர்களை கைது செய்வதோடு அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன.

இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக கச்சத்தீவை மீட்குமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி தம்பித்துரை மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரி சுப்பிரமணிய பிரசாத், ‘தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றால் அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, கைது செய்கிறார்கள்’ என்றார்.

அத்துடன், ‘பாரம்பரியமான இடத்தில்தான் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது. 1974ஆம் ஆண்டு இலங்கையுடன் நடந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கை மீது போரா தொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இருநாட்டு பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்கலாம். அதை மத்திய அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Related Posts