கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது.
21ம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, அதி வணக்கத்திற்குரிய யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும் இடம்பெறவுள்ளன.
இந்த வருடம் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களும், இலங்கையில் இருந்து 3 ஆயிரம் யாத்திரிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாத்திரிகர்களுக்கான குடிநீர், உணவு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்திற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
யாத்திரிகர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையினரும், தனியார் போக்குவரத்துச் சபையினரும் இணைந்து செய்கின்றார்கள். 20ம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நெடுந்தீவிற்கு புறப்படும். இந்த வாகன ஒழுங்குகள் காலை 11.30 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
படகு சேவைகள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவானில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
அத்துடன், 21ம் திகதி தமது இல்லங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களின் படகு சேவைகள் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெறுமென்று நெடுந்தீவு பங்குத்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் இதன்போது தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், கடற்படையினர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பங்குத் தந்தையர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.