கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா வரும் பெப்ரவரி மாதம் 20-ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தற்போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகி விட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கை தூதரகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் கச்சத்தீவுக்கு செல்ல மாட்டார்கள் என தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர், என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 67 படகுகளையும் திருப்பி ஒப்படைக்காததால் இந்த திருவிழாவை நாங்கள் புறக்கணிப்போம். தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்கள் யாருக்கும் எங்கள் படகுகளை வாடகைக்கும் விடமாட்டோம் என மீனவர்கள் சங்கத் தலைவர்கள் தேவதாஸ் மற்றும் எஸ்.எமிரெட் ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.
இதேபோல், படகுகளை விடுவிக்கும் கோரிக்கையுடன் நாளை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யவும், வரும் 26-ம் திகதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.