கச்சத்தீவு திருவிழாவிற்கான அனைத்து எற்பாடுகளும் பூர்த்தி

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுவெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகைதரவுள்ள நிலையில், மலசல கூடங்கள் மற்றும் தங்குமிட தற்காலிக கொட்டகைகள், போக்குவரத்து வசதி, படகுச் சேவைகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்கள்.

சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தற்காலிக மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினால் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரைக்கும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆம் திகதி மதியம் 2 மணிமுதல் படகுச் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

கடற்படை மற்றும் தனியார் படகுச் சேவைகளும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், படகுகளில் பயணிப்போர் கட்டாயம் உயிர்காப்பு அங்கி அணிவதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். படகுகளில் பயணிக்கும் போது, அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், நடவடிக்கை எடுப்பதற்கு கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், படகுகள் அனைத்தும் கடற்படையினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுமென்றும் கூறினார்.

அத்துடன், தண்ணீர் வசதிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள், குற்றச்செயல்கள் நடைபெற்றால் கண்காணிப்பதற்கு 200 ற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும், அனைத்து வசதிகளும் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளதென்றும், பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தமது உடமைகளின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts