கச்சதீவு திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து செல்வதற்காக விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி திருவிழாவிற்கு இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 6000 பேர் வரையிலும் வருவார்கள் என எதிர்பார்ப்பதாவும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கச்சதீவுத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்றன.
இந்நிலையில் கச்சதீவு திருவிழா தொடர்பாக செவ்வாய்க்கிழமை (25) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலும் தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்துகள் சேவையில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையும் ஈடுபடும். தொடர்ந்து குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு வரையிலும் தனியார் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. படகுக் கட்டணமாக ஒருவருக்கு 250 ரூபா அறவிடப்படும்.
அத்துடன், குடிநீர் வசதியும் செய்யப்படவுள்ளது. மேலும் யாத்திரிகர்களின் நலன் கருதி கச்சதீவில் உணவகங்களும் அமைக்கப்படவுள்ளன என மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.