கச்சதீவில் பாதுகாப்புக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் கச்சதீவில் அந்தோனியார் கோவில் அமைப்பதற்கு சிறீலங்கா கடற்படையினரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதுடன், இந்தியாவைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தது.
இதற்கமைய இந்திய உயர் ஸ்தானிகர்களால் அங்கு கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்படவில்லையென்பதை உறுதிசெய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கச்சதீவு உடன்பாடு குறித்து விளக்கமளித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார,
1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி – சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்குமிடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கச்சதீவில் இந்திய மீனவர்கள் மீன்கள் மற்றும் வலைகளைக் காயவிடலாம் எனவும், தேவையானால் அவர்கள் ஓய்வெடுக்கவும் படகுகளைத் திருத்தம் செய்யவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் கச்சதீவில் தங்கியிருந்து மீன் பிடிக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட வில்லையெனவும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.