அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவினரும், சசிகலா தலைமையில் மற்றொரு பிரிவினரும் அணி சேர்ந்துள்ள நிலையில், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து என்ன நடக்க கூடும் என்பது குறித்து ஒரு விளக்கம் இதோ:
ஓ.பி.எஸ் ராஜினாமாவை வாபஸ் பெற இயலுமா?
வற்புறுத்தலால்தான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக ஓ.பி.எஸ் கவர்னரிடம் கூறலாம். ஆட்சியில் தொடர தேவையான எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது என்பதை ஓ.பி.எஸ் நிரூபித்தால், ராஜினாமா வாபஸ் முடிவை ஆளுநர் ஏற்கமுடியும்.
ஆட்சியமைக்க எத்தனை எம்.எல்.ஏக்கள் பலம் தேவை?
தமிழக சட்டசபை உறுப்பினர்களின் பலம் அடிப்படையில் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஆட்சியமைக்க தேவை.
குடியரசு தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த முடியுமா?
காபந்து முதல்வராக பன்னீர்செல்வம் தொடருவார் என ஆளுநர் அறிவித்துள்ளார். இந்நிலையில், பன்னீர்செல்வம், மற்றும் சசிகலா இருவருமே ஆட்சியமைக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, கோரினால் அப்போது ஏற்படும் குழப்பம் காரணமாக, ஆளுநர், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க முடியும்.
ஆளுநர் தனக்கு விருப்பமானவர்களை முதல்வராக்கலாமா?
ஓ.பி.எஸ் முதல்வராக தொடர கவர்னர் அனுமதிக்க முடியும். ஆனால், எதிர்தரப்பு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க முன்வந்தால், அப்போது ஆளுநர் காத்திருந்து முடிவு செய்வார்.
திமுக பன்னீர்செல்வம் அரசுக்கு ஆதரவளிக்க முடியுமா?
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக திமுக வாக்களிக்க முடியும். ஆனால் திமுக இதை விரும்பாது. இன்னும் 4 வருட கால ஆட்சி எஞ்சியுள்ளதால், திமுக தேர்தல் நடப்பதைத்தான் விரும்பும்.
சசிகலா முதல்வராக முடியுமா?
போதிய அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கும் சூழலில், முதல்வராக அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதே ஆளுநர் கடமை. ஆனால், பன்னீர்செல்வம் தரப்பு தங்களிடம் பலம் இருப்பதாக கோரினால் பதவியேற்பு விழாவை ஆளுநர் தள்ளிப்போடலாம்.
பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால்?
சசிகலா நினைத்தால் பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால், முதல்வராக தொடருவதில் உடனடி சிக்கல் ஏற்படாது. ஆளுநர் நினைத்தால், பன்னீர்செல்வத்தை முதல்வராக தொடரச் செய்யலாம்.
கட்சி தாவல் தடை சட்டம் பாயுமா?
அதிமுகவில் ஓ.பி.எஸ் உட்பட மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினால் கட்சி தாவல் தடை சட்டம் பாயும். ஆனால் கட்சியின் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏக்கள், அதாவது 90 எம்.எல்.ஏக்கள் வேறு ஒரு கட்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.