ஜாம்பவான் இயக்குநர், மணிரத்னத்தின், ஓ காதல் கண்மணி படம் குறித்து ரசிகர்கள் நேர்மறை விமர்சங்களை கூறிவருகின்றனர்.
மணிரத்னம் தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள். மவுனராகம், அக்கினி நட்சத்திரம், நாயகன், தளபதி, ரோஜா, பாம்பே, அலைபாயுதே போன்ற தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளை பிரசவித்த இயக்குநர் மணிரத்னம், மீண்டும் காதல் கதையோடு களமிறங்கியுள்ள படம், ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நித்யா மேனன் காம்போவின் கெமிஸ்டிரியை, டிரைலர்களில் பார்த்த ரசிகர்கள் இது மற்றுமொரு அலைபாயுதேவாகத்தான் இருக்கும் என்று கனவு கோட்டை கட்டினர்.
இதனிடையே படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களின் கமெண்டுகள், வெளிவர ஆரம்பித்துவிட்டன. பெரும்பாலான கமெண்டுகள், மணிரத்னம், தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாகவே கூறுகின்றன.
ஏனெனில், அலைபாயுதேவுக்கு பிறகு 15 வருடங்களில் மணிரத்னம் கொடுத்த 5 படங்களில் நான்கு படங்கள் மிக மோசமான தோல்வியை அடைந்தன.
அதில், கன்னத்தில் முத்தமிட்டால் மட்டுமே படைப்பு ரீதியாக தப்பியது. எனவே, கிட்டத்தட்ட, மணிரத்னத்தின், கமர்சியல் தேவைக்கான வாழ்வா, சாவா படமாகவே, ஓ காதல் கண்மணி பார்க்கப்பட்டது. அந்த ஆசிட் டெஸ்டில் மணிரத்னம் பாஸ் ஆகிவிட்டார்.
தற்காலத்து அப்பர்-மிடில் கிளாஸ் இளைஞர்களின் வாழ்க்கை முறையை படமாக்கியுள்ளதன் மூலம், இளைஞர் கூட்டத்தை தன்பக்கம் இழுத்துள்ளார் மணிரத்னம் என்கின்றனர் படம் பார்த்தோர்.
அதேநேரம், ஏ மற்றும் பி பிரிவு ஆடியன்சைதான் படம் குறி வைத்துள்ளது என்பதும் கருத்தாக உள்ளது. அது மணிரத்னத்தின் வழக்கமான பாணிதான் என்பதால் பாதகமில்லை. படம் குறித்து, பாசிட்டிவ் ரிவியூக்கள் வர ஆரம்பித்துள்ளதாக, நடிகர் சூர்யா, நடிகை குஷ்பு போன்றோரும் தங்களது டிவிட்டர் தளத்தில் சிலாகித்துள்ளனர்.
ரஹ்மானின் இசையில் வெளியான மெண்டல் மனதில் பாடல் ஏற்கனவே, பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது. இந்நிலையில், பிசி ஸ்ரீராமுடன் மீண்டும் சேர்ந்துள்ள மணிரத்னம், இப்படத்தில், விஷுவல் கம் இசை ட்ரீட் வைத்துள்ளார்.
அதிலும், பறந்து செல்லவா பாடல் காட்சியில், ரஹ்மானுக்கும், ஸ்ரீராமுக்கும், யார் பெரியவர் என்ற போட்டியே நடந்துள்ளதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள். முதல் பாதியைவிட இரண்டாம் பாதி மேலும் அருமையாக இருப்பதாக மவுத்-டாக்குகள் வந்தவண்ணம் உள்ளன.
முதல் பாதியில் பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரிக்கு பறந்த பந்துகள், இரண்டாம் பாதியில், நடு பேட்டில் நச்சென்று பட்டு சிக்சர்களுக்கு பறக்கின்றனவாம்..ஃபார்முக்கு வந்த மணிரத்னம் என்ற பேட்ஸ்மேனிடமிருந்து..