ஓர் ஆண்டில் பலாலி விமானநிலையம் செயற்படும்!

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யாமல் இருக்கும் ஓடுபாதையை தரமுயர்த்தும் செயற்பாடுகளுக்கு இந்தியா – இலங்கை தரப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு வலிகாமம் வடக்கு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதையடுத்தே விரிவாக்கல் திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து, இந்திய விமான தொழிநுட்பப் பிரிவைச்சேர்ந்த ஐந்துபேர் அடங்கிய குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டதையடுத்து விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யாமல் இருக்கும் ஓடுபாதையைத் தரமுயர்த்தமுடியும் என அக்குழு தெரிவித்ததாக இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒரு விமானநிலையப் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்கால விமானப்போக்குவரத்துக்கள் மற்றும் பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் என்பன கருத்தில் கொள்ளப்படும்.

ஆனால் மக்களின் காணி சுவீகரிப்புத் திட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளதால், தற்போது இருக்கும் விமானநிலையத்தின் ஓடுபாதையை தரமுயர்த்துவதைவிட சிறந்த தெரிவாக வேறு எதுவும் இல்லையென அக்குழுவைச் சேர்ந்த இன்னொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், பலாலி விமானநிலையமானது 2.3கிலோமீற்றர் ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இதில் 100 பயணிகள் பயணம்செய்யக்கூடிய போயிங் 717 போன்ற ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட விமானங்களை இயக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானநிலையம் அடுத்தவருடம் இயங்க ஆரம்பிக்கும் எனவும் இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

Related Posts