புதிய சட்டத்திட்டங்களுக்கு அமைய ஓய்வூதியம் பெறுவோர் வெளிநாடு செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது கட்டாயமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் அதிகளவிலான ஓய்வூதியம் பெறுவோர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்பாகவும் வெளிநாடுகளில் வசிப்பது தொடர்பாகவும் எவ்வித தகவல்களையும் திணைக்களத்திற்கு வழங்குவதில்லை.
அது தவிர, அவர்கள் ஓய்வூதியம் பெறும் வழிகள் தொடர்பான எவ்வித தகவல்களும் திணைக்களத்திற்கு அறிவிப்பதில்லை. இதனால் ஓய்வூதியம் வழங்குவதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் திணைக்களம் எதிர்நோக்குகிறது.
இவற்றைக் கருத்திற்கொண்டு இந்த புதிய சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. இதேவேளை, அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுவோரில் 21,600 பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களில் 6,800 பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியம் பெறுவோரில் 4000 பேர் அவர்களுக்கான ஓய்வூதியத்தை வங்கிகளினூடாகவும் 2,800 பேர் வெளிநாட்டுத் தூதரகங்களினூடாகவும் பெறுவதாக ஓய்வூதியத் திணைக்களததின் புதிய ஆய்வுத் தகவல் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.