ஒமானில் இலங்கை பணிப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இலங்கை பணிப்பெண்கள் எந்த வகையில் சட்டவிரோதமாக ஒமானுக்குள் பிரவேசிக்கின்றார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை நடாத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளுக்காக ஒமானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் கொழும்புக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா வீசாவில் செல்லும் இலங்கை பணிப் பெண்கள், சட்டவிரோதமாக தொழில் வீசாவை பெற்று எவ்வாறு ஒமானுக்கு செல்கின்றனர் என்பது தொடர்பில் தமது அமைச்சின் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தலதா அத்துக்கோரள குறிப்பிட்டார்.
இந்த விசாரணைகளின் ஒர் பகுதியாக ஒமானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த உள்ளுர் பணிப்பெண்கள் ஒமானிலுள்ள தூதரகங்களுக்கு தெரியப்படுத்தாமல் நாடு கடத்தும் முகவர்களால் ஒமானுக்கு கொண்டுசெல்லப்படுவதாக கடந்த மாதம் 26 ம் திகதி டைம்ஸ் ஒப் ஓமான் தகவல் வெளியிட்டிருந்தது.
இவ்வாண்டு மாத்திரம் இவ்வாறான 70 கடத்தல் சம்பவங்கள் தமக்கு பதிவாகியுள்ளதாக ஒமானிலுள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
ஒமானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிக்கும் சட்டவிரோத குழுக்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்துவருவதாக தலாதா அத்துக்கோரள கூறியுள்ளார்.
நேபாள முகவர் ஒருவரால் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஊடாக ஒமானுக்குள் கடத்தப்பட்ட 21 வயதான பெண் ஒருவர் அண்மையில் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தின் பிரகாரம் 30 வயதுக்கும் குறைந்த பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வது சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் உரிய வழிமுறைகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுச் செல்லுமாறும் தலாதா அத்துகோரள வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே சட்டவிரோதமாக இலங்கை பணிப்பெண்கள் கடத்தப்படுகின்றமை தொடர்பில் ஒமான் அரசாங்கத்திடம் உதவியை கோரியுள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு ஒமான் அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இலங்கை தூதரக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் பணிப்பெண்கள் வெளிநாட்டு பயண வீசாவுடன் ஒமானுக்குள் பிரவேசித்த பின்னர், அங்கு தொழில்வாய்ப்புக்கான வீசாவை பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும் அந்த நடைமுறை நிறுத்தப்பட்ட பின்னர் அயல்நாடுகள் ஊடாக பணிப்பெண்கள் ஒமானுக்குள் சட்டவிரோதாக பிரவேசிப்பதாக இலங்கை தூதரக அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்