20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு தர்மசாலாவில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-ஓமன் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை வீசிய ஓமன் சுழற்பந்து வீச்சாளர் அஜய் லால்செட்டா ரன் கொடுக்காமல் மெய்டனாக வீசினார். இதன் மூலம் ஒரு அணியின் அறிமுக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில், முதல் ஓவரையே மெய்டனாக வீசிய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
அயர்லாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் வில்லியம் போர்ட்டர்பீல்டும் (29 ரன்), பால் ஸ்டிர்லிங்கும் (29 ரன்) நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். அடுத்து வந்த கேரி வில்சன் தனது பங்குக்கு 38 ரன்கள் (34 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தார். எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கெவின் ஓ பிரையன் 14 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ஓமன் அணி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 74 ரன்களுடன் வெற்றி நோக்கி பயணித்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜீஷன் மசூத் (38 ரன், 33 பந்து, 6 பவுண்டரி), கவார் அலி (34 ரன், 26 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரின் வெளியேற்றத்துக்கு பிறகு மிடில் வரிசை தடம் புரண்டது. அட்னன் இலியாஸ் (4 ரன்), மெரன் கான் (2 ரன்), ஆமீர் கலீம் (0) வந்த வேகத்தில் நடையை கட்டினர். 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (14 ஓவர்) இழந்து தத்தளித்த நிலையில், ஜதிந்தர் சிங்கும், ஆமர் அலியும் அணிக்கு கைகொடுத்தனர். 17-வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் திரட்டினர். இதனால் ஓமன் அணி மறுபடியும் எழுச்சி பெற்றது. ஜதிந்தர் சிங் 24 ரன்னில் கிளீன் போல்டு ஆனார்.
கடைசி ஓவரில் ஓமனின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை சோரன்சன் வீசினார். முதல் பந்தை நோ-பாலாக வீச பந்து பவுண்டரிக்கும் ஓடியது. பிறகு லால்செட்டா இன்னொரு பவுண்டரி அடிக்க ஆட்டம் ஓமன் பக்கம் திரும்பியது. ஆமர் அலி 32 ரன்களில் (17 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனாலும் அந்த அணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. ஏனெனில் மீண்டும் ஒரு நோ-பாலில் பந்து பவுண்டரிக்கு சென்றது. முடிவில் ஓமன் அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து, அயர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. உலக கோப்பை போட்டியில் ஓமனுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.