ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது!சோதனைகள் முற்றாக நிறுத்தம்

ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மைத்திரி பால சிறிசேன பதவியெற்ற பின்னர் பயணிகள் சோதனை  தளர்த்தப்பட்டு ஓமந்தையின் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு வாகனங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை பொருள்களுடன் வரும் வாகனங்கள் அவற்றை சோதனைக்குட்படுத்தும் இடமாகவும் ஓமந்தை சோதனைச் சாவடி செயற்பட்டிருந்தது. மேலும் நள்ளிரவு வேளைகளில் பயணிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதேவேளை இந்த சோதனைச் சாவடியினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் பயணிகள் மற்றும் தெற்கு நோக்கில் இருந்து வடக்கிற்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts