ஓட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வருகிறது!

முச்சக்கர வண்டிகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்க முடியும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான போக்குவரத்துத்து விதிமுறைகள் இந்தவாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

“இந்த ஆண்டின் முதல் 120 நாள்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்பற்ற சாரதியத்தால் 117 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதுதொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியது.

இந்த நிலையிலேயே முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த புதிய போக்குவரத்து விதிமுறைகள் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வரும் 20ஆம் திகதி புதன்கிழமை வெளியிடப்படும்” என போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

மூன்று பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடன் இரண்டு பெரியவர் பயணிக்க முடியும். ஸ்பீட் மீற்றர் மற்றும் கட்டண மீற்றர் என்பன அவசியமானதாகும் ஆகிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படுகின்றன.

சாரதி இருக்கைக்கும் பயணிகளின் இருக்கைக்கும் இடையே 21.5 சென்றிமீற்றர் இடைவெளி இருக்கவேண்டும்.

ஆனால் இந்த புதிய கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதான தண்டம் அறவீடு தொடர்பில் கூறப்படவில்லை.

“கட்டுப்பாடுகளை பின்பற்றாதோர் மீது அறவிடப்படும் தண்டம் தொடர்பில் குறிப்பிடப்படாது குறைபாடுதான். வர்த்தமானியில் குறிப்பிடாவிட்டால் பொதுச் சட்டத்தின் கீழ் தண்டம் அறவிடப்படலாம்” என்று அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

Related Posts