ஓட்டிசம் வடக்கு இளம் பராயத்தினரிடையே அதிகரிப்பதாக முதல்வர் கூறுகிறார்

ஓட்டிசம் என்பது பிள்ளைகளின் விருத்தியோடு தொடர்புடைய உளத் தொழிற்பாடுகளை பாதிப்படையச் செய்கின்ற ஒரு நிலையாகும் என வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அப்பலோ வைத்தியசாலையில் ஐந்து மணித்தியால இருதய சத்திர சிகிச்சையின் பின்னர் ஓட்டிசம் பற்றி என்னால் உணர முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது முன்னைய காலங்களை விட தற்போது உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்வதாக அறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் நீண்டகால யுத்தத்தின் பின்னர் இதன் பாதிப்புக்கள் மிகவும் அதிகரித்துள்ளது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

யுத்த காலச் சூழல் தாய்மார்களை எந்தளவுக்குப் பாதித்தது, அதனால் ஏற்பட்ட தாக்கங்களின் பரிணாமமே இந்த நிலையோ என்பது இன்னமும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.

ஆனால் இவ்வாறான பிள்ளைகளின் தொகை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான பிள்ளைகள் பேசும் ஆற்றலை முழுமையாகவே இழந்து போகலாம்.

அல்லது சில வார்த்தைகளை உச்சரிக்கக் கூடிய நிலையிலும் அவர்கள் தமது தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முயன்றும் மொழிசாரா தொடர்பாடல்களைக் கூட முழுமையாக மேற்கொள்ள முடியாதவர்களாக ஒரு விருத்தியற்ற நிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவர்களை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவார்களேயாயின் அவர்களின் பொறுமை, இவ்வாறான பிள்ளைகளை விளங்கிக் கொள்கின்ற தன்மை, பிள்ளைகளை பொறுப்பாக கையாள்வது போன்ற விடயங்களில் அவர்களின் திறன்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

அவர்களும் எம்மைப் போல் உணர்ச்சிகள் உடையவர்களே. ஆனால் அவர்களின் திறனற்ற நிலை அவர்களால் தமது உணர்ச்சிகளை வெளிக்காட்ட இடமளிப்பதில்லை.

சென்னை அப்பலோ வைத்தியசாலையில் எனது ஐந்து மணித்தியால இருதய சத்திர சிகிச்சை நடைபெற்ற பின்னர் என்னைக் கொண்டு வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடத்தினார்கள்.

எனக்கு நினைவு வந்த போது பலவித எண்ணங்கள் என்னுள் வெளிவந்தன. ஆனால் அவற்றைச் சொல்ல முடியவில்லை. உடம்பு அதற்கு இடமளிக்கவில்லை.

உணர்ச்சிகளுடன் உணர்வு அற்ற ஒரு நிலையில் கட்டிலில் கிடந்தேன். உணர்ச்சிகள் இருந்தும் எண்ணங்கள் இருந்தும் கருத்தாடலில் ஈடுபடவேண்டும் என்ற ஒரு அவா இருந்தும் முடியாத ஒரு நிலையில் இருந்தேன்.

அந்தவாறான நிலைமைதான் இந்த ஓட்டிசம் என்ற நிலைமையும். ஆனால் ஒன்றை மறவாதீர்கள். உங்கள் அன்பும், கரிசனையும், தன்னலமற்ற சேவையும் அவர்களுக்கு விளங்கும். அன்பை எதிர்பார்த்தே அவர்கள் இருக்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

சில சமயங்களில் தமது விரல்களை நீட்டி உங்களைத் தொட்டு தமது மனோநிலையை வெளிக்கொண்டு வர அவர்கள் முனைகின்றார்கள் எனவும் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அறிக்கையில் தெரவித்துள்ளார்.

Related Posts