ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள் வைத்தியசாலையில்

ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 21பேர் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலையில் நேற்று முன்தினம் கற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஒவ்வாமை நோயால் உடம்பில் ஏற்பட்ட தடிப்பு, கடி, சொறி காரணமாக மாணவர்கள் அவதியுற்றனர்.

இதனை அடுத்து இவ்வாறு பாதிக்கப்பட்ட 21 மாணவர் கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரம் 1 தொடக்கம் 4 வரை யான வகுப்புக்களைக் கொண்ட இந்தப் பாடசாலையில் சுமார் 70 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கட்டடவசதிகள் போதாத நிலையில் பாதுகாப்பற்ற மிகவும் பழைய மண்டபத்திலே இரண்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதுடன் பிரார்த்தனை மண்டபமாகவும் பாவிக்கப்பட்டு வருகின்றது. இந்த மண்டபத்தில் இருந்த மாணவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பாதிப்பையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களைத் தவிர ஏனையோர் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.மேற்படி கட்டடம் பாவனைக்கு உகந்ததாகக் காணப்படவில்லை எனக் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே சுகாதாரப் பகுதியினரால் அறிவுறுத்தப்பட்டபோதிலும் அடிப்படை வசதிகள் இல்லாத பாதுகாப்பற்ற கட்டடத்திலேயே கற்றல் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளன.

மேற்படி சம்பவத்தையடுத்துப் பாடசாலைக்கு வருகைதந்த சுகாதாரப் பகுதியினர் சம்பவம் தொடர்பாகவும் ஆராய்ந்ததுடன் மேற்படி கட்டடத்தில் வகுப்புக்கள் நடத்த வேண்டாம் என அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதனால் கற்றல் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு போதிய இடவசதி இல்லாமையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையானது போதிய வசதிகள் இன்றிக் காணப்படுவதுடன் போதியளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகப் பெற்றோர்களால் பல தடவைகள் கல்விப் பணிப்பாளருக்கு எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காமையால் மாணவர்களை வேறு பாடசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரு வருடங்களில் இடம்பெற்ற கோட்ட, வலய, மாகாண மட்ட தமிழ்த்தின, ஆங்கில தினப் போட்டிகளில் தீவக வலயத்தில் அதிகூடிய இடங்களைப் பெற்ற பாடசாலையாக இந்தப் பாடசாலை விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Posts