கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
குறிப்பாக தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியான சிலந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, தாம் கூறியவாறு ஒளடத பாணியைப் பருகியிருந்தால் கொரோனா ஏற்பட்டிருக்காது என தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.