ஒலிம்பிக் தின நிகழ்வுகள் முதற் தடவையாக மன்னாரில்

மன்னாரில் முதற் தடவையாக ஒலிம்பிக் தின நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மாலை நான்கு மணியளவில் மன்னர் தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இருந்து வைபவரீதியாக ஆரம்பமாகியது.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலைகளின் மாணவ மாணவிகள் ஒலிம்பிக் தீபத்தையும் அதனை தொடந்து ஒலிம்பிக் சின்னம் மற்றும் கொடியை ஏந்தியவாறு நடைபவனியாக சென்றனர்.

மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஆரம்பமாகிய ஒலிம்பிக் நடைபவனி மன்னாரின் பிரதான சுற்றுவட்டத்தின் ஊடாக செபஸ்தியார் வீதியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை அடைந்தது. அங்கு வைபவரீதியாக ஒலிம்பிக் தீபம் ஏற்றபட்டதுடன் தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி உட்பட ஏனைய கொடிகளை அதிதிகள் வைபவரீதியாக ஏற்றிவைத்தனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டச் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, விளையாட்டு விவகார அமைச்சின் பணிப்பாளர் ரூவான் சந்திர, ஒலிம்பிக் சங்கத்தின் உப தலைவர் தேவகென்றிக், தேசிய ஒலிம்பிக் சங்க செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, மற்றும் அரசியல் பிரமுகர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இராணுவத்தின் இசை நிகழ்சி, நடனங்கள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரை இடம்பெற்றது அதனை தொடர்ந்து சித்திர போட்டிகளின் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

Related Posts