ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச் செல்வோம்!- அனந்தி சசிதரன்

முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்பு பாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே. இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது கன்னி உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம்

வணக்கம். நான் அனந்தி சசிதரன்-எழிலன்.

அமர்வுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் தவிசாளர் அவர்களே, முதலமைச்சர் அவர்களே, அமைச்சர்களே, எமது சக மாகாணசபை உறுப்பினர் நண்பர்களே, விருந்தினர்களே, மாகாணசபை அதிகாரிகளே, எனதருமை ஊடக நண்பர்களே அனைவருக்கும் முதல் கண் எனது வணக்கங்கள்.

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள், கூட்டமைப்பிற்கு ஏகோபித்த ஆதரவை ஏன் வழங்கியிருக்கறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் சொல்லி தெரியவைக்க வேண்டியதொன்றல்ல.

அனைவரதும் ஒற்றுமை, தமிழனை தமிழனே ஆளவேண்டும், அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனபவற்றை வலியுறுத்தியே மக்கள் மீண்டுமொரு முறை திரண்டு வந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்குகளை அளிக்கும் போது அவர்கள் எங்களைப் பார்க்கவில்லை, கட்சிகளை பிரித்துப் பார்க்கவில்லை எந்தவித பாகுபாடும் மக்கள் மனங்களில் இருக்கவில்லை. அனைவருக்கும் ஒன்றிணைந்த கூட்டடமைப்பையே வரவேற்றார்கள்.

அதிலும் முதலமைச்சருக்கோ, எனக்கோ கூடிய அளவில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்பு பாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே. அதற்கப்பால் தனிப்பட்ட ரீதியில் எவருமே போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது.

1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தப் பிரகாரம் உருவான 13வது திருத்தச் சட்டத்தின் கீழாக மாகாணசபை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரியும்.

எமது விடுதலைப் போராட்டத்தினில் அனைத்தையுமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த, இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மாகாண சபை முறைமையை நிராகரித்திருந்தது. அனைவருக்கும் தெரிந்ததே.

அத்தகைய மாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி, எதையாவது செய்யலாமாவென இப்போது நாம் பரீட்சித்துப் பார்க்க போகின்றோம்.

அனைவரும் மதிக்கின்ற அமைச்சரவையொன்று இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களிற்கு துறைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டவை வெறுமனே காகிதத்தினில் இருக்காது எதையாவது செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.

யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவேன். அவர்களிற்கு வெறுமனே இயன்ற வலி நிவாரணங்களைமட்டும் நாம் வழங்கினால் போதாது.

எம்முன் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக ,மூன்று குழந்தைகளது தாயாக, காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத் தலைவியாக கேட்கின்றேன்.

மாண்புமிகு முதலமைச்சர் , வடக்கு மாகாணசபையின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்றவர். அவ்வகையினில் அனைவரது கருத்துக்களிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும், கவனத்தினில் கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

வாருங்கள், நாம் ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச் செல்வோம். என்றார்.

Related Posts