ஒற்றுமையாக இருக்க வேண்டிய சங்கத்தை பிளவுபடுத்தி விட்டனர்; சரத்குமார்

ஒற்றுமையாக இருக்க வேண்டிய சங்கத்தை தற்போது பிளவுபடுத்தி உள்ளனர் என சரத்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்க பிரச்சினையை சட்டபூர்வமாக சந்திக்க உள்ளேன். பொதுக்குழு லயோலா கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுக்குழுவில் கலந்துகொள்ள எனக்கு விருப்பம் கிடையாது. நான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்த வழக்கு 28-ந் தேதிக்கு மாற்றப்பட்டு இருந்தது. பொதுக்குழுவை நல்லபடியாக நடத்த வேண்டும். லயோலா கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால் நடிகர் சங்க வளாகத்தில் நடத்தி இருக்கிறார்கள். பொதுக்குழு நடைபெறும் இடத்தை மாற்றி இருப்பதால் மீண்டும் நோட்டீஸ் தந்து இருக்க வேண்டும்.

இடம் மாற்றி இருப்பது பற்றி குறுஞ்செய்தியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ சொல்லி இருக்க வாய்ப்பு கிடையாது. எல்லோரும் கலந்துகொண்டு இருப்பார்களா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது. பொதுக்குழுவிற்கு வரநினைத்து இருந்தவர்களும் வந்து இருக்க முடியாது என்பதால் அதனை பொதுக்குழுவாக எடுத்துக் கொள்ளமுடியாது.

முதலில் ரூ.150 கோடி ஊழல் என்றார்கள். பின்னர் ரூ.60 கோடி ஊழல் என கூறினார்கள். இப்போது ரூ.1.67 கோடி என கூறுகின்றனர். பலமுறை அவர்கள் என்ன கேட்டார்களோ அதை எல்லாம் தந்துவிட்டேன். தற்போது புதுசு புதுசாக பிரச்சினையை உருவாக்குகின்றனர். என்னை 50-100 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

என் மீது குற்றச்சாட்டு வைத்து உள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது எல்லோரையும் பிளவுபடுத்தி சண்டை போடும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் தலையிட்டு இருக்கலாம் என்பது பற்றி எனக்கு தெரியாது. நடிகர் சங்கத்தில் அடிதடி நடந்துள்ளது. கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதாக எனது மனைவி சொல்லி தான் எனக்கு தெரியும். நான் தலைவராக, பொதுச்செயலாளராக இருந்தபோது நடந்த பொதுக்குழு எந்த ஒரு அடிதடியும் இன்றி சுமுகமாக நடந்துள்ளது. தற்போது நடந்துள்ள சம்பவங்கள் பற்றி பொதுக்குழு நடத்தியவர்களை தான் கேட்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts