இந்திய அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா, நேற்று இலங்கை அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாராவின் பந்து வீச்சில் (116–வது ஓவர்) 4, 4, 6, 6, 6, 0 என்று ஒரே ஓவரில் 26 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
இதற்கு முன்பு சந்தீப் பட்டீல், கபில்தேவ் ஆகியோர் ஒரு ஓவரில் தலா 24 ஓட்டங்கள் எடுத்ததே இந்திய வீரரின் அதிகபட்சமாக இருந்தது.
பாண்டியா அந்த ஓவரின் கடைசி பந்தை விளாச முயற்சிக்காமல் தடுத்து ஆடினார்.
அதில் ஒரு பவுண்டரி சென்றிருந்தால் உலக சாதனையாக மாறியிருக்கும்.
2–வது நாள் ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்குள் ஹர்திக் பாண்டியா 107 ஓட்டங்களை சேகரித்தார்.
உணவு இடைவேளைக்குள் 100 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்தியர் பாண்ட்யா தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 பந்தில் சிக்சர்கள் அடித்த 3–வது இந்தியர் என்ற சிறப்பை பாண்டியா பெற்றுள்ளார். கபில்தேவ், டோனி ஏற்கனவே இத்தகைய சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
இந்த இன்னிங்சில் ஹர்திக் பாண்ட்டியா 7 சிக்சர் விரட்டினார். இன்னும் ஒரு சிக்சர் அடித்திருந்தால் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்தியரான நவ்ஜோத் சித்துவின் (1994–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) சாதனையை சமன் செய்திருப்பார்.
பாண்டியா 86 பந்துகளில் சதத்தை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரின் 5–வது அதிவேக சதமாக இது பதிவானது.
கபில்தேவ் (74 பந்து), அசாருதீன் (74 பந்து), ஷேவாக் (78 பந்து), ஷிகர் தவான் (85 பந்து) முதல் 4 இடங்களில் இருக்கிறார்கள்.
இந்த தொடரில் இதுவரை 36 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான்.