ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும் கதை தான் கதகளி: விஷால் பேச்சு

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் விஷால் பேசும்போது, ‘எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் ‘கதகளி’ என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் கதகளி தலைப்பு தமிழ் தான் என்று தெரிந்த பின்னர்தான் படத்துக்கு கதகளி என்று பெயர் வைத்தோம். நான் முதன் முறையாக இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்து பணியாற்றி உள்ளேன்.

இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை. படத்தில் இடம் பெரும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், லீடும் நிச்சயம் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும். அது தான் ‘கதகளி’. என்ன அழைப்பு என்பதை எல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மிகச்சிறப்பாக படத்தை படம் பிடித்துள்ளார். கேத்ரீன் தெரசா நடிப்பு நிச்சயம் பேசப்படும். என்னை பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டி கொள்கிறேன்’ என்றார்.

Related Posts