ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம்?

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் உள்ள இந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு வழங்காமல் அரசு செயலற்ற கொள்கையை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் உணவு சமைப்பதற்காக சமையல் எரிவாயு பிரச்சனை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிகளுக்கு கொடுக்க மருந்து இல்லை. இந்த பிரச்னைகளை அரச அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இந்த நிலைமை அதிகரிக்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்களா? இது அதிகரித்தால், ஒட்டுமொத்த மருத்துவமனை அமைப்பும் முடக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனை சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது பயனற்றது. மருத்துவர்கள், ஊழியர்கள், பணிக்கு வரும் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என்றால் எப்படி வேலைக்கு சமூகமளிப்பது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் உள்ள உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. ஏனைய மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts