ஒரு வருடத்தின் பின்னர் பயணத்தை ஆரம்பித்த நெடுந்தாரகை!

புனரமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (19) கையளித்தார்.

நெடுந்தாரகை படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர் படகை பார்வையிட்டதுடன் இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும், துறைசார் அமைச்சுக்கும் இதன்போது ஆளுநர் நன்றியை தெரிவித்தார்.

தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்க உள்ளது.

நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts