யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையிலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதிக்கு முன்னர் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்.மாவட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன.
எந்தெந்தெக் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரியாத நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மீள்குடியமர்வை எப்படிச்செல்வது எனத் தெரியாது அதிகாரிகள் திணறிப்போயுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 9870 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். 4400 ஏக்கர் காணி படையினர் வசமிருந்து விடுவிக்கப்படவேண்டும் இந்நிலையில் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு யாழில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சால் மயிலிட்டி தையிட்டியை உள்ளடக்கிய 1500 ஏக்கர் பகுதியை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் கிடைக்காததால் இன்னமும் அங்கீகரிக்கவில்லை இதில் 800 ஏக்கரை விடுவிப்பதற்கு இணங்கும் படைத்தரப்பு எஞ்சிய நிலப்பரப்பை நிரந்தரமாக்கவே விடுவிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இந்த இழுபறியே அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படாமைக்கான காரணம்.
காணிகளை விடுவிக்க இராணுவம் இவ்வாறு பின்னடித்துவரும் நிலையில் மீள்குடியேற்றத்தை ஜனாதிபதியின் கால எல்லைக்குள் நிறைவேற்ற முடியாது என்று பிரதேச மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்