ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும்!

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சின் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

விலைச் சூத்திரத்தின்படி 2022 ஆம் ஆண்டில் ஒரு சிகரெட்டின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்பதுடன், அதனை அண்மையில் நிதியமைச்சர் வரவு செலவு திட்ட யோசனையாக முன்வைத்து, சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு சிகரெட்டின் விலை 70 ரூபாவாக உள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

இவ்வாறு சிகரெட் ஒன்றினால் அதிகரிக்கின்ற 5 ரூபா நாட்டின் வரி வருமானத்தில் நேரடியாக சேரும். இதில் 5 சதம் கூட நாட்டின் புகையிலை தொழிலுக்கு சொந்தமில்லை. இன்னும் 5 வருடத்தில் ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபாவை நெருங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று சிகரட் பாவனையால் நாளாந்தம் 60 பேர் மரணமடைகின்றனர். விலை சூத்திரத்தின் மீதான வரி அதிகரிப்பினால் சிகரெட் விற்பனை 1.1 வீதத்தால் வீழ்ச்சியடையும். கடந்த வருடம் 2.2 பில்லியன் சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டடுள்ளன. இந்த 5 ரூபா அதிகரிப்பினூடாக 2022 ஆம் ஆண்டில் 25 மில்லியன் சிகரெட்டுக்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 03 வருடங்களின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதாவது 2 வருடங்களின் பின்னர் மதுபானத்தின் விலை அதிகரித்துள்ளது. பியர் மீது 250 ரூபா வரி அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வரி, மிகவும் முக்கியமானது. அந்தப் பணம் முழுவதையும் இலங்கை அரசாங்கம் அடுத்த வருடம் நேரடி அரசாங்க வருவாயாகப் பெற்றுக்கொள்ளும். அதற்கிணங்க அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவை மதுபானத்தின் மூலம் மொத்த வருவாயாக பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts