தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கும், வட மாகாணத்தைச் சேர்ந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து, இந்தச் சந்திப்பில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் கூட்டமைப்பினுள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் சார்பாக தான் நடந்து கொள்வதாக தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலளிக்கையில், தான் கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சியுடன் மட்டுந்தான் இணந்திருக்க முடியுமேயொழிய, வன்முறையோடு சம்பந்தப்பட்ட ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நான் இருக்க முடியாதென்று தெரிவித்தேன்.
‘ஆனால் அந்தக் கட்சிகளை நான் எந்தவிதமான பேதத்துடனும் நடத்தவில்லை. அவர்களுடன் மனிதாபிமானத்துடன். சகோதரத்துவத்துடன்தான் நடந்து வருகின்றேன். அவ்வாறு பேதம் காட்டி நான் நடந்து கொள்வதாக இருந்தால் ஈபிஆர்எல்எப் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்க மாட்டேன். அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு செயற்பட்டதை அவர்கள் போற்றி மகிழ்ந்திருக்கின்றார்கள்.’
‘இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருப்பவர்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். இது துரதிஷ்டவசமானது. நான் எவரையும் வேற்றுமையுடன் நடத்தவில்லை. எனவே இது சம்பந்தமாக அவர்கள் எந்தவிதமான ஐயப்பாட்டையும் கொள்ளத் வேண்டியதில்லை.’
‘ஒரு சில்லறை விடயத்தை வெளியில் இருப்பவர்கள் பெரிதுபடுத்தியிருப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது’ என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.