யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் ஒருநாள் போட்டி நேற்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 139 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதற்கிணங்கக் களமிறங்கிய அவ்வணி அணித்தலைவர் பி.துவாரகசீலன், வி.யதுசன் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 50 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பி.துவாரகசீலன் 53, வி.யதுசன் 52, எம்.சிந்துர்ஜன் 46, எஸ்.கபில்ராஜ் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பாக எஸ்.மதுசன் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.
274 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அடுத்தடுத்து இலக்குகளை இழந்து 38.4 பந்துபரிமாற்றங்களில் 134 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் எஸ்.அலன்ராஜ் மட்டும் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ஆர்.லோகதீஸ்வரன் 4 , வி.யதுசன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியைச் சேர்ந்த வி.யதுசன் தெரிவுசெய்யப்பட்டார்.