ஒருதலைக் காதலால் கொலை: தமிழகத்தில் இலங்கையருக்கு சிறை

தான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமில் வசிக்கும் ஒருவர் என தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முக வள்ளி. இவருடைய மகன் செல்லப்பாண்டி (வயது-20). இவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆடைவடிவமைப்பு மற்றும் தோளில் நுட்பத்துறையில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

கல்லூரி செல்வதற்கு வசதியாக கணபதி பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

செல்லப்பாண்டியின் மாமா முருகையா என்பவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையத்தை அடுத்த ஈஞ்சம்பள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்து வருகிறார்.

அவரைப்பார்க்க செல்லப்பாண்டி அடிக்கடி ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமுக்கு சென்று வந்தார். அப்போது முருகையாவின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இது குறித்து இரு குடும்பத்தினருக்கும் இசைவு தெரிவித்தனர்.

ஆனால், அதே அகதிகள் முகாமை சேர்ந்த விஜயன் என்பவருடைய மகன் கஜான் என்கிற கஜேந்திரன் (வயது-23) என்பவரும் முருகையாவின் மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், செல்லப்பாண்டியின் காதலை அந்த பெண் ஏற்றுக்கொண்டதால் கஜேந்திரன் தீராத கோபத்தில் இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 3–7–2013, அன்று இரவு 8.30 அளவில் முருகையாவின் வீட்டுக்கு கஜேந்திரன் சென்றார். அப்போது அங்கு செல்லப்பாண்டி இருப்பதை பார்த்ததும், அவர் மீது ஆத்திரம் கொண்ட கஜன் செல்லப்பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டார்.

உடனடியாக வீட்டுக்குச் சென்று, கையில் கிடைத்த ஒரு இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு செல்லப்பாண்டி செல்லும் வழியில் சின்னவெத்திபாளையத்திலுள்ள மரகதம் தோட்டம் பகுதியில் சென்று காத்திருந்தார்.

இரவு 9.15க்கு செல்லப்பாண்டி வந்தபோது, அவரை தடுத்து நிறுத்திய கஜேந்திரன், இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடலை அருகிலுள்ள விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் தூக்கி வீசி விட்டு கஜேந்திரன் சென்று விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் மலையம்பாளையம் பொலிசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.பி.இளங்கோ நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில், செல்லப்பாண்டியை கொலை செய்த குற்றத்துக்காக வாலிபர் கஜேந்திரனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், குற்றத்தை மறைக்கும் வகையில் செல்லப்பாண்டியின் உடலை கிணற்றில் வீசிய குற்றத்துக்காக கஜேந்திரனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்பளித்தார்.

Related Posts