இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் ‘ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்’ என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக துணைத்தூதரகத்தினால் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘ஒன்லைன் மூல இந்திய விசா விண்ணப்பப் படிவம்’ என்னும் தலைப்புடனான https://india-visa.co/index.php என்னும் முகவரியை உடைய இணையத்தளம் ஒன்று இயங்குவது பற்றி தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தளமானது இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறுகிறது. இந்த இணையத்தளம் பயனாளர்களிடம் 55 பிரித்தானிய பவுண்டுகள் அல்லது 90 அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமனான இந்திய ரூபாய்களை தனது சேவைக் கட்டணமாக செலுத்துமாறு கோருகின்றது. பின்னர் நுழைவுச்சீட்டு பெறும் நிலையத்திற்கு செலுத்த வேண்டிய நுழைவுச்சீட்டு கட்டணத்தை செலுத்துமாறு கோருகிறது.
இந்திய அரசினது நுழைவுச்சீட்டை வழங்குவதற்கான அதிகாரபூர்வமான ஒன்லைன் இணையத்தளத்தைப் போலவே சில தீய சக்திகள் பொய்யான இந்த இணையத்தளத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றன என்பதால் விண்ணப்பதாரிகள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
அதிகாரமளிக்கப்பட்ட நுழைவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையத்தளமானது https://www.indianvisaonline.gov.in/என்னும் இணையத்தள முகவரியை கொண்டுள்ளது என மீளவும் வலியுறுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரிகள் அதிகாரமளிக்கப்படாத எந்தவொரு இணையத்தளத்திற்கும் நுழைவுச்சீட்டு சேவைக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர்.
அவ்வாறு செலுத்தப்படும் கட்டணங்களுக்கு தூதரகம் பொறுப்பாக மாட்டாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.