வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வடக்கு மாகாண சபை செயலற்று இருப்பதாகப் பொதுமக்களை எண்ண வைப்பதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்மீது பொதுமக்களை அதிருப்தி கொள்ள வைப்பதே இந்தப் பரப்புரையின் நோக்கம்.
ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும். ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது என உறுதியாகக் கூறுகிறேன் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இழையவளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக்குட்டிகளை விநியோகிக்கும் தொடக்கநிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (01.09.2014) நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் சகிலாபானு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது விவசாயிகள் தங்களது பண்டைய பாரம்பரிய அறிவோடு நவீன தொழில்நுட்பங்களையும் உள்வாங்கினால் மாத்திரமே அதிஉச்சப் பயனைப் பெறமுடியும். அதன் அடிப்படையிலேயே இழையவளர்ப்பு என்ற புதிய உயிர்த்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வாழைக் குட்டிகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இயங்கும் விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் தூய விஞ்ஞானத்துக்கான நிறுவனம் என்ற அமைப்பிடம் இருந்து வாங்கி விநியோகிக்க ஆரம்பித்துள்ளோம். இதற்காக விவசாயத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபா இப்போது செலவிடப்பட்டுள்ளது. இந்த இழைய வளர்ப்பு வாழைக்குட்டிகளை நடுகை செய்வதற்கு இப்போதுதான் பொருத்தமான பருவம். இதனை சித்திரை, வைகாசியில் நாங்கள் விநியோகித்திருக்க முடியாது.
பருவத்தே பயிர் செய் என்பது போன்றுதான் ஒவ்வோரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் என்று ஒரு காலம் இருக்கின்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுமானப் பணிகள் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதால் வழமையாக சிறுபோக அறுவடை முடிவடைந்த பின்னர் ஆவணி மாதத்திலேயே நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேலைகள் ஆரம்பமாகும். இந்த வருடம் வழமைக்கு மாறாகக் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. பெரும் கட்டுமான பணிகளுக்கு நீரைப் பயன்படுத்தினால் வரட்சியால் அவதிப்படும் மக்கள் மேலும் துயரப்படநேரும். இதனால் குறைந்தளவு நீர்த் தேவை உள்ள வேலைகள் மாத்திரமே இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமாத்திரம் அல்லாமல் சில அபிவிருத்தித்திட்டங்களில் ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பே அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடைமுறையும் உள்ளது. இவை எல்லாம் தெரிந்திருந்தும், வடமாகாணசபை அபிவிருத்தித்திட்டங்களில் அக்கறை காட்டாததாலேயே ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் உள்ளது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. பொதுமக்கள் இதன் பின்னால் உள்ள விசமத்தனத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா வேலைத்திட்டங்களும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணாகாதவாறு கார்த்திகை, மார்கழி மாதம் முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து ஐந்து விவசாயிகளுக்கு வெங்காயச் செய்கையை மேற்கொள்ளுவதற்கென தலா 50,000 ரூபாவும், ஐந்து விவசாயிகளுக்குக் காளான் வளர்ப்பை மேற்கொள்ளுவதற்குரிய காளான் வித்திகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ. இந்திரராசா, ம. தியாகராசா, வைத்திய கலாநிதி சி. சிவமோகன், அ.ஜெயதிலகா, விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.