எங்களை பார்த்து ஒட்டுக்குழு என்று கூறும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்று தெற்கில் ஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்று வடக்கில் ஒட்டுக்குழுவாக இருப்பவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் (12) தெல்லிப்பளையில் நடந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபை என்பது மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் இரங்கிப்பெற்ற பிச்சையல்ல. மாறாக நாங்கள் இரத்தம் சிந்தி போராடியதால் பெற்ற உரிமையாகும். 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து எமது அரசியல் இலக்கை நோக்கி செல்வதே எமது நடைமுறை யதார்த்த கொள்கையாகும்.
நாம் இரத்தம் சிந்தி போராடியபோது அனைத்து போராளிகளையும் பயங்கரவாதிகள் என்று உள்ளே தள்ளிய சாத்தான் ஒன்று இன்று தமிழ் தேசியம் என்று வேதம் ஓதுகின்றது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் விக்னேஸ்வரனுக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது? கொழும்பு மேட்டுக்குடி கறுவாக்காட்டு விக்னேஸ்வரனுக்கு தெரியுமா எங்கள் மக்கள் பட்ட அவலங்களின் ஓலம்? அன்று அரசு அதிகாரத்தின் ஒட்டு குழுவாக இருந்து எமது உரிமை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்தவர் இன்று வந்து தமிழ் தேசியத்தின் ஒட்டுண்ணி குழு உறுப்பினராக இருந்து வருகின்றார்.
பொய் கூறி போலி வாக்குறுதி வழங்கி இவர் இன்று வீற்றிருக்கும் வடக்கின் சிம்மாசனம் கறுவாக்காட்டிலிருந்து கொண்டு மந்திரம் ஓதி பெற்ற ஒன்றல்ல எமது தியாகங்களால் கிடைத்த வட மாகாண சபை என்ற சிம்மாசனத்தில் வேட்டி கசங்காமல் வியர்வை சிந்தாமல் இவர் ஏறி உட்கார்ந்து இருக்கின்றார் சுதந்திரத்துக்காக போராட வந்தாரா? சோறில்லை என்று எமது மக்கள் அழும்போது பசி தீர்க்க வந்தாரா? உணவுக் கப்பல் அனுப்ப வந்தாரா? மருந்துக்கப்பல் அனுப்ப வந்தாரா ?எமது மக்களுக்காக மூட்டை சுமக்க வந்தாரா? அன்றாட அவலம் தீர்க்க வந்தாரா? அபிவிருத்தி செய்ய வந்தாரா? ஓரத்தில் நின்று எமது உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம் என்று பச்சை குத்திவிட்டு இன்று நாங்கள் விரித்த பாயில் படுத்துறங்க வந்திருக்கிறார்.
முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களே அன்றும் ஒட்டுக்குழு இன்றும் ஒட்டுக்குழு என்பதை தமிழ் மக்கள் தமது தீர்ப்பை திருத்தி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை. வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அல்லது ஆளுநர் தடையாக இருக்கின்றது என்று சுத்தப்பொய் பேசும் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நான் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறேன். வட மாகாண சபையை கைப்பற்றி ஒரு வருடம் பூர்த்தியாகிய நிலையில் தமிழ் மக்களுக்கு எதை ஆற்றியிருக்கின்றீர்கள்? தமிழரசு அமைப்போம் என்று வீர முழக்கமிட்டீர்கள். உல்லாசமாக நீங்கள் ஓடி திரிய சொகுசு வாகனங்களை தானே கெஞ்சி கேட்டு பெற்றீர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், ஈ.பி.டி.பியின் தெல்லிப்பளை இணைப்பாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) உள்ளிட்ட கட்சியின் பிரதேச இணைப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளடங்கலான பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.