ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டு வரும் இராணுவ முகாம்

வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் இராணுவ முகாமால் அப்பகுதிகள் வாழ் பூர்வீக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றியுள்ளது.

oddakapulam

105 குடும்பங்களுக்கு சொந்தமான 169 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர்.

கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வசாவிளானில், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பகுதியளவில் விடுவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஒட்கப்புலம் பகுதி முழுமையாக இராணுவத்தின் வசம் இருந்து வருகின்றது.

511ஆவது படையணி மற்றும் 07ஆவது விஜயபாகு படையணி இங்கு நிலைகொண்டுள்ளன. குறித்த இரு இராணுவ முகாம்களும் வீதியின் இருபக்கத்திலும் காணப்படுகின்றன. வீதி மக்களின் பாவனைக்கு விடுபட்டுள்ளது.

வசாவிளான் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கு விடுபட்டிருந்தாலும், முழுமையாக விடுபடாமல் இராணுவ மயாக்கப்பட்டுள்ளது.

வடக்கு எல்லையில் பலாலி பாதுகாப்பு தலைமையகமும், தெற்கு, மேற்கே இவ்விரு படையணிகளும் நிலை கொண்டுள்ளதால், மீள்குடியேறிய மக்கள் இராணுவ கட்டமைப்புக்குள் வாழ்வது போன்ற எண்ணப்பாடு தோன்றியுள்ளது.

மீள்குடியேறிய மக்கள் மத்தியிலும், பூர்வீக காணி உரிமையாளர்கள் மத்தியிலும் அச்சமான எண்ணப்பாட்டினை இது தோற்றிவித்துள்ளது.

ஜே.244 கிராம அலுவலர் பிரிவில் 82 ஏக்கர் நிலமும், ஜே.252 கிராமஅலுவலர் பிரிவில் 87 ஏக்கருமாக 169 ஏக்கரில் இந்த இரு இராணுவ முகாமும் உள்ளது. இதனை நிரந்தரமாக சுவீகரிக்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த உயர பாதுகாப்பு வலய எல்லைக்குள், அமல உட்பவ மாதா ஆலயம், ஒட்டகப்புலம் முறிவு நெறிவு வைத்தியசாலை, விவசாய நிலங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப்பட்டு வருவதனால், பொதுமக்களின் ஏனைய நிலங்கள் விடுவிக்கப்படுமா என்ற எண்ணப்பாடு காணி உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts