ஒடிசா போலீசாருக்கு கவாஸ்கர் கண்டனம்

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2–வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய இந்திய அணி 92 ரன்னில் சுருண்டதால் ரசிகர்கள் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

sunil_Gavaskar-Stringency

தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்த போது ரசிகர்கள் மீண்டும் கலாட்டாவில் ஈடுபட்டனர். 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்து இருந்தபோது ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள்.

ரசிகர்களின் இந்த செயலால் போட்டி நடைபெறாமல் தென்ஆப்பிரிக்கா வென்றதாக அறிவிக்கப்படுமோ என்ற நிலை இருந்தது. ரகளையில் ஈடுபட்ட பெரும்பாலான ரசிகர்களை வெளியே அகற்றிவிட்டு 30 நிமிடத்துக்கு பிறகு போட்டி நடத்தப்பட்டது.

ரசிகர்களின் ரகளையை கட்டுப்படுத்த தவறிய ஒடிசா போலீசாருக்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

எல்லை கோட்டு அருகே மைதானத்தில் நிறுத்தப்படும் போலீசாரின் வேலை கிரிக்கெட் பார்ப்பதற்கு அல்ல. ரசிகர்களை கண் காணிப்பது தான். ஒடிசா போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்.

இது கண்டனத்துக்குரியது. சில ரசிகர்கள் செய்த இந்த மோசமான செயலால் புத்திசாலியான ரசிகர்கள் நல்ல பொழுது போக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரசிகர்களின் இந்த செயலால் கட்டாக்கில் இன்னும் சில ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகள் நடைபெறாது. ஒடிசா மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு உதவி தொகை வழங்குவதை கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

ரசிகர்கள் விலை மதிப்பு மிக்கவர்கள். ஆனால் மோசமாக விளையாடியதற்காக ரகளையில் ஈடுபடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. பாட்டில்களை கொண்டு மைதானத்துக்குள் எறிவது மிகவும் தவறு.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

Related Posts