“எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்ற நிலையில், அதில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரிவினரால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது” – என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.ம.சு.மு. பிரதமர் வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் சமல் ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்ததுடன் அதில் ஆரோக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு கருத்துகள் உடைய வர்கள் இருக்கலாம். ஆனால், அனைவரினதும் இலக்கு ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்ப தாகும். தற்போது வேட்பாளர் தெரிவு இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் 17 சிறிய, சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வாறான தலைமையின் கீழே தேர்தலுக்குச் செல்லவேண்டும் என்ற கோரிக்கையை எம்மிடம் பலமாக முன்வைத்துள்ளனர்.
பிரதமர் வேட்பாளர் தெரிவில் அவர்கள் சில சில சிவப்பு சமிக்ஞை களைக் காண்பித்துள்ளனர். அனைவரது கருத்துகளையும் உள்ளவாங்கிக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குச் செல்ல தீர்மானித்துள்ளளோம்.
அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (நேற்று முன்தினம்) புதன்கிழமை அவருடைய கருத்தை முன்வைத்திருந்தார். இது தொடர்பிலும் நாங்கள் ஆராய்வோம். அது மட்டுமல்லாது, கட்சிக்குள் தற்போது இருவேறு கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. அந்தவகையில் அதற்குத் தீர்வாக மத்தியஸ்தம் வகிப்பவர்களால் சமல் ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்த லில் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆராயப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மை அதிகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே உள்ளது. இதனால் நாங்கள் தீர்மானிக்கும் வேட்பாளர் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
கட்சி செயற்குழு மற்றும் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரே இறுதித் தீர்மானத்தை எடுக்கவேண்டும். ஜனாதிபதி நேற்று (நேற்று முன்தினம்) முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். சமல் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கப்படுவதானது தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பதை ஜனாதிபதி அவருக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் நோக்கில் இருந்தார். எனினும், கட்சி நலனுக்காக கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு அவர் கட்டுப்படுவதாகத் தெரிவித்திருந்தார். சமல் ராஜபக்ஷ என்பவர் நாட்டின் மூன்றாவது பிரஜையாகக் கருதப்பட்டவர். அவருக்கு சகல கட்சிகளிடத்திலும் நன்மதிப்பு உள்ளமை அனைவரும் அறிந்ததே” – என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் எம்.பி. திலங்க சுமத்திபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.