ஐ.நா வை புறக்கணித்தால் இலங்கையே தனிமைப்படும் – இரா.சம்பந்தன்

sampanthan“ஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. இவ்வாறான மனநிலையுடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது, சர்வதேச நியதிகளுக்கு கட்டுப்படாது இப்போதிருக்கும் அதிகாரங்களை இந்த நாடாளுமன்றில் பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் பெரும் விளைவுகளையே எதிர்நோக்க நேரிடும்.

இத்தகைய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபட்டால் சர்வதேசத்திடம் இருந்து இலங்கை மேலும் தனிமைப் படுத்தப்படும் நிலையே ஏற்படும். ஆனாலும் ஒருநாள் இந்த ஆட்சிப் பீடத்தின் தெரிவிலிருந்து நாடு கட்டாயம் மீளத் திரும்ப வேண்டியிருக்கும். அந்த நாள் விரைவில் வரும் என நாம் நம்புவோம்.

இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

“வரவிருக்கும் ஐ.நாவின் விசாரணை இலங்கைக்கு எதிரான தல்ல. அது மனிதாபிமான, மனித உரிமை சட்டங்களை ஒரேயடியாக மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிரானது. முழு நாட்டையுமே பாதிப்புற வைத்த சட்ட விலக்களிப்புக் கலாசாரத்துக்கு எதிரானது. அது வடக்கில் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கும் தெற்கில் இளைஞர்கள் காணாமல் போனமைக்கும் எதிரானது.

வெலிவேரியா, முள்ளிவாய்க்கால், மிக அண்மையில் எனின் தர்காநகரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமை விசாரணைக் குழுவை விசாரணை நடத்த இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கோரி அரச தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான இரண்டு நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நீண்ட உரையை சம்பந்தன் எம்.பி. சபையில் ஆற்றினார். அந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts