ஐ.நா. விசாரணை தீர்வுக்கான கதவைத் திறக்கும்! – நவியின் அறிவிப்பு மூலம் உறுதி என்கிறது கூட்டமைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.விசாரணை நீதியாக நடை பெறும் என்பது உறுதியாகியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த விசாரணை ஊடாக தமிழர் தீர்வுக்கான வாசல் திறக்கப்படும் என்றும் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள – பெளத்த இனவாதிகள் ஆகியோருக்கு நவநீதம்பிள்ளையின் பதில் உச்சியடியாக அமைந்துள்ளது என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

suresh

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஏராளமான விடயங்கள், இலங்கைக்கு வெளியே உள்ளன. இந்த விடயங்களை ஐ.நா. விசாரணைக்குழு திரட்டிக்கொள்ளும். இதனால், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளாமலே ஐ.நா. விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் தமிழ்ப் பத்திரிகை ஒன்று நேற்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன, இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று இறுதி யுத்தம் நிறைவடைந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐ.நா. செயலாளர் பான் கீ – மூன் நியமித்த நிபுணர் குழு (தருஸ்மன்) அன்று வலியுறுத்தியிருந்தது.

ஆனால், இலங்கை அரசு இந்தக் கருத்துக்கு செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வந்ததனால் இந்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணையை எதிர்கொண்டது. எனினும், இதனையும் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசு, ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்து நாடாளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அத்துடன், நவநீதம்பிள்ளைக்கு எதிராகவும், ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள – பெளத்த இனவாதிகள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், வடகொரியா, சிரியாவுக்குள் ஐ.நா. விசாரணைக்குழு செல்லாவிட்டாலும் விசாரணைகள் இடம்பெற்றன என்றும், ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனு மதிக்காமல் விடுவதால் தமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற மீறல்களுக்குக் காரண மானவர்களைக் கண்டறிவதற்கும் பொறுப்பாளிகளாக்குவதற்கும் இந்த விசாரணை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள இந்தக் கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நீதியாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள – பெளத்த இனவாதிகள் ஆகியோருக்கு நவநீதம்பிள்ளையின் பதில் உச்சியடியாக அமைந்துள்ளது.

ஐ.நா. விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மாலான ஒத்துழைப்பை வழங்கும். இதேவேளை, ஐ.நா. விசாரணை ஊடாக தமிழர் தீர்வைக் காண்பதற்கான வாசல் திறக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் நம்பியிருக்கின்றார்கள்” – என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் எம்.பி.

தொடர்புடைய செய்தி

இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே ஐ.நா. குழுவால் விசாரணை மேற்கொள்ளமுடியும் – நவிப்பிள்ளை

Related Posts