ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணையில் அடங்கிய யோசனைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா.பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை ஐ.நா.தலைமையகத்தில் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தின் நம்பிக்கையையும் வெற்றி கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளை முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் எதிர்கால வெற்றிப் பயணத்திற்கு சர்வதேசத்தின் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன எனவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இச் சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் இம்முறை ஐ.நா. சபைக் கூட்டத்தின் தொனிப்பொருள் நிலையான அபிவிருத்தி என்பதாகும். முழு உலகமே இதனைத்தான் இன்று எதிர்பார்த்துள்ளது.
ஐ.நா. சபை 17 கோட்பாடுகளை முதன்மைப்படுத்தி அதனை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இத் திட்டத்தை இலங்கையில் வெற்றிகரமாக்க பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு கடந்த ஜனாதிபதித் தேர்தல், மற்றும் பொதுத் தேர்தலை சுமுகமாக அமைதியாக நடத்துவதற்கு பங்களிப்புச் செய்த ஜனாதிபதிக்கு இதன்போது தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல்களை சுமுகமாக நடத்துவதற்கு ஆதரவு வழங்கிய ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது வரவேற்பை வெளியிட்ட செயலாளர் நாயகம் திட்டமிடப்பட்ட அரசியல் வேலைத்திட்டம் ஊடாக இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் அதற்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் என்ற வகையில் எதிர்காலத்திலும் ஐ.நா. அமைப்புடன் நம்பிக்கையோடு இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆணைக்குழுக்களை நியமித்து 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை நல்லாட்சிக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜெனிவா யோசனைகள் தொடர்பாக சரியான வழியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அனைத்து தருணங்களிலும் மீளிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.