ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி

இந்தியாவின் 70–வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15–ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகாடமி விருதுகள், ஒரு தடவை ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர்.

அவர் எழுப்பிய ‘ஜெய்கோ’ பாடல் கோ‌ஷம் உலகின் பெரும்பாலான நாட்டு ரசிகர்களை கவர்ந்தது. எனவே ஐ.நா. சபையில் ஆகஸ்டு 15–ந்தேதி அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அன்று ரகுமானின் பாடல்களை கேட்க 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர். ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966–ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.

இந்த இரு சிறப்புகளையும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts