இலங்கை இறுதிப் போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் சாதகமானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.
இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை இலங்கையின் வட மாகாண சபையில் நேற்று தாக்கல்செய்யப்பட்டது.
இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கான மக்களின் ஆர்வத்தை நோக்கிய நடவடிக்கைகளை இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் உள்ள மாகாண சபைகளில் வடமாகாண சபைதான் இந்த அறிக்கையை முதன்முதலாக வரவேற்றுள்ளது.
ஆயுத மோதலில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர் பற்றியும் சீரான முறையில் விசாரணை நடத்தப்பட்டிருப்பதைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆயுத மோதல் காலத்தில் பரவலாக இடம்பெற்றிருந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு உள்ளுர் விசாரணை பொறிமுறைக்கு மேலான ஒன்று அவசியம் என்பதை ஐ.நா. அறிக்கை வலியுறுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மீறல் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத்தக்க வகையில் விசாரணை பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு தீர்மானங்களை வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிறைவேற்றியிருக்கிறார்.